கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தநாடு கிராமத்தைச்சேர்ந்தவர், நந்தகுமார். இவர் உளுந்தூர்பேட்டை அமைச்சார் அம்மன் கோயில் தெருவில் நகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சனிக்கிழமை மாலை நந்தகுமார் வழக்கம்போல், வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க சுடிதார் அணிந்திருந்த பெண்ணும் அவருடன் 40 வயது மதிக்கத்தக்க சேலை அணிந்திருந்த பெண் ஒருவரும் நந்தகுமாரின் நகைக் கடைக்கு வந்தனர்.
அந்தப்பெண்கள் அவர்கள் கொண்டு வந்திருந்த ஐந்து சவரன் எடை கொண்ட பழைய நகைகளை கொடுத்து அதனை மாற்றி, புதியதாக மூன்று சவரன் நெக்லஸ் மற்றும் இரண்டு சவரன் செயின் ஆகியவை வேண்டும் என கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் கொண்டு வந்திருந்த பழைய நகைகளைப்பரிசோதித்தபொழுது, அது 916 கேடிஎம் தரம் கொண்ட தங்க நகை என்பதை உறுதி செய்தார், நந்தகுமார்.
இதனால் அந்த நகைகளை மாற்றிக்கொடுப்பதற்காக எடை போட்டுவிட்டு புதிய நகைகளையும் காண்பித்து உள்ளார். பழைய நகைகளை எடை போட்டு சரிபார்த்த பொழுது, அவர்கள் எடுத்த புதிய நகைக்கு கூடுதலாக 11 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கொடுக்க வேண்டி இருந்துள்ளது. அப்பொழுது அவர்கள் 3 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பதாகவும் கூறி அவர்கள் பரிசோதித்த பழைய 916 தரம் கொண்ட கேடிஎம் தங்க நகையை இரு பெண்களும் அவர்கள் கொண்டு வந்திருந்த பையில் வைத்துக்கொண்டனர்.
பழசுக்கு புதுசு...கவரிங் நகையை கொடுத்து தங்க நகையை ஏமாற்றி வாங்கிய பெண்கள் பின்னர் கூடுதல் பணம் குறித்து நந்தகுமாரும் இரண்டு பெண்களும் அடுத்தடுத்து பேரம் பேசி உள்ளனர். அப்பொழுது அந்தப் பெண்கள் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை இறுதியாக கொடுப்பதாக கூறியுள்ளனர். அதற்கு நந்தகுமாரும் ஒப்புதல் தெரிவித்த நிலையில், அந்தப் பெண்கள் பையில் வைத்த பழைய நகையை எடுப்பது போல் நடித்து, அதே மாடலில் அதே எடையில் செய்து வைத்திருந்த கவரிங் நகைகளை, அதே பையில் இருந்து எடுத்து நந்தகுமாரிடம் கொடுத்துள்ளனர்.
ஏற்கெனவே காண்பித்த 916 தரம் கொண்ட கேடிஎம் நகையும் தற்போது கொடுக்கப்பட்ட நகையும் ஒரே மாடல் மற்றும் ஒரே எடை கொண்டது என்பதால் எந்த விதமான சந்தேகமும் இல்லாமல் அதனை மறு பரிசோதனையும் செய்யாமல் நந்தகுமார் பெற்றுக்கொண்டார். பின் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை வாங்கிக்கொண்டு 916 கேடிஎம் தரம் கொண்ட ஐந்து சவரன் எடையுள்ள நெக்லஸ் மற்றும் செயின் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கான ரசீது எழுதி கொடுத்து ஐந்து சவர நகைகளையும் வழங்கி உள்ளார், நந்தகுமார்.
இரவுக்கடையை மூடும் நேரத்தில் கடையில் உள்ள அனைத்து நகைகளையும் கணக்கீடு செய்து லாக்கரில் வைத்துவிட்டு வாங்கி வைத்திருந்த பழைய நகைகளை மீண்டும் பரிசோதனை செய்தபொழுது, அந்த இரு பெண்களும் கொடுத்த நகைகள் போலியான கவரிங் நகை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் இதேபோல் வேறு கடைகளில் ஏதேனும் அந்தப்பெண்கள் கவரிங் நகைகளை கொடுத்து ஏமாற்றி உள்ளார்களா? என விசாரித்தனர். இரண்டு பெண்களும் இதேபோல் மேலும் இரண்டு கடைகளில் நந்தகுமார் கடையில் கொடுத்து ஏமாற்றிய ஐந்து சவரன் எடை கொண்ட, அதே இரண்டு நகைகளையும் கொடுத்து புதிய நகை வாங்குவதாக பேரம் பேசுவதும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் நகை கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மூன்று நகைக்கடைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் இரண்டு பெண்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடும்பப் பெண்கள்போல் தங்களை தயார்படுத்திக் கொண்டு, பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகளை வாங்குவது போல் கவரிங் நகைகளை கொடுத்து, நகைக் கடை உரிமையாளர்களை ஏமாற்றி 916 கேடிஎம் தரம் கொண்ட தங்க நகைகளை இரு பெண்கள் எடுத்துச்சென்ற சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தங்க நகைக்கடன் நிறுவனத்தில் 24 கிலோ தங்க நகைகள் கொள்ளை... பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு...