சென்னை: துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று முன்தினம் (ஜுன் 6) இரவு சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்தப் பயணிகளின் பாஸ்போா்ட், ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது தஞ்சாவூரைச் சோ்ந்த பஷீா்அலி (40) என்ற பயணியின் ஆவணங்களை சோதனை செய்தபோது, அது போலி பாஸ்போர்ட் என்று தெரியவந்தது.
பஷீர்அலி ஆன சிவகுமார்
மேலும், விசாரணையில் அவருடைய உண்மையான பெயா் தஞ்சாவூரைச் சேர்ந்த சிவகுமார் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா பயணி விசாவில் துபாய்க்குச் சென்று, அங்கேயே தங்கி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
உண்மையான பாஸ்போா்ட் மூலம் இந்தியா திரும்ப முடியாது என்பதால், ஏஜெண்ட்களிடம் பணம் கொடுத்து பஷீா் அலி என்ற பெயரில் போலி பாஸ்போா்ட் வாங்கி, அதில் சென்னை வந்தது தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமை அலுவலர்கள் போலி பாஸ்போா்ட்டில் வந்த சிவகுமாரை கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் ஒப்படைத்தனா்.
இதையும் படிங்க: கசந்த பிறந்தநாள் பார்ட்டி- ஆண் நண்பருடன் சண்டை- லிப்ட் கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!