சென்னை: தமிழ்நாட்டில் இருந்து பல கோடி மதிப்புள்ள தொன்மை வாய்ந்த சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனையில் ஈடுபட்டிருந்த, சர்வதேச சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை இன்டர்போல் உதவியுடன் சிபிஐ ஜெர்மனியில் வைத்து கடந்த 2011ஆம் ஆண்டு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுபாஷ் கபூரை சிபிஐ தமிழ்நாடு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரிடம் கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்படைத்தனர். சுபாஷ் கபூர் மீது தமிழ்நாட்டில் மட்டும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடந்து வந்தது.
இதில் உடையார்பாளையத்தில் 94 கோடி ரூபாய் மதிப்புள்ள 19 தொன்மை வாய்ந்த சிலைகளை நியூயார்க்கிற்கு கடத்தி விற்பனை செய்த வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. பல முறை ஜாமீன்கோரி, சுபாஷ் கபூர் மனு தாக்கல் செய்து வழக்கை இழுத்தடித்து வந்ததால் தீர்ப்பு வர காலதாமதமாகியது.
இந்த நிலையில் ஜெர்மனி குடிமகனான சுபாஷ் கபூரை, இந்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க ஜெர்மனி அரசு கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைத்தது. குறிப்பாக 10 ஆண்டுகளுக்குள் வழக்கை முடித்து சுபாஷ் கபூரை ஒப்படைத்துவிடுவதாக ஜெர்மனி அரசிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு விசாரணை முடிக்கப்படாததால் சுபாஷ் கபூரை திரும்ப ஒப்படைக்குமாறு ஜெர்மனி அரசு கேட்டுக்கொண்டது. மேலும் தொடர்ந்து காலதாமதம் ஆவதால் ஜெர்மனி அரசு குற்றவாளிகளை பரிமாறிக்கொள்வதற்காக பரஸ்பர ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதாக இந்திய அரசிடம் தெரிவித்தது. விரைவில், இந்தியப் பிரதமர் ஜெர்மனி நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால், இந்த வழக்கினால் ஒப்பந்தம் தொடர்பாக பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், இந்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதனால் மத்திய வெளியுறவுத்துறைச்செயலாளர் வின்யா குவார்ட்டா இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தலைமைச்செயலாளர் இறையன்புவிற்குக் கடிதம் எழுதி ஒன்றை எழுதினார். இதையடுத்து உடையார்பாளையம் கடத்தல் வழக்கு குறித்து விரைவாக விசாரணையை முடிக்குமாறு, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கும், உடனடியாக தீர்ப்பு வழங்குமாறு சிறப்பு நீதிமன்றத்திற்கும் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் உடையார்பாளையம் சிலைத்திருட்டு வழக்கில், சர்வதேச சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர், சஞ்சீவ் அசோகன், மாரிசாமி, பாக்யகுமார், ஸ்ரீராம், பார்த்திபன் ஆகிய ஆறு பேரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு , தண்டனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் ஜெர்மனி அரசிடம் ஒப்படைக்கப்படுகிறாரா? ஏற்கெனவே சுபாஷ் கபூர் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்திருப்பதால், விதிக்கப்பட்ட தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்று பார்க்கும்பொழுது, அதனைக்கருத்தில் கொண்டு சுபாஷ் கபூர் விடுதலையாக வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு விடுவிக்கப்படும் சுபாஷ்கபூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட உடன் குற்றங்கள் செய்த வெளிநாட்டவர்கள் தங்கும் திருச்சி முகாமில் வைக்கப்படுவார்.மேலும் உடனடியாக ஜெர்மனி அரசு சுபாஷ் கபூரை ஒப்படைக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளதால், விரைவில் சுபாஷ் கபூரை மத்திய அரசு மூலமாக ஜெர்மனி அரசிடம் ஒப்படைக்கத்திட்டமிட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் சுபாஷ் கபூர் மீது மீதமுள்ள நான்கு வழக்கு தொடர்பாக கைது செய்து விசாரணை நடத்த மீண்டும் ஜெர்மனி அரசுக்கு கடிதம் எழுத இருப்பதாகவும், ஆனால் இந்திய அரசுடன் குற்றவாளிகளை பரிமாறிக்கொள்ளும் பரஸ்பர ஒப்பந்தத்தை ஜெர்மன் அரசு தடை செய்திருப்பதால், மீதமுள்ள நான்கு வழக்குகளில் சுபாஷ் கபூரிடம் விசாரணை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அமெரிக்காவில் உள்ள ஹோம் லேண்ட் செக்யூரிட்டி பகுதியிலும் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மீது வழக்குகள் இருப்பதால், அவர்களும் சுபாஷ் கபூரிடம் விசாரணை நடத்த ஜெர்மனி அரசிடம் கடிதம் எழுத வாய்ப்புள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை இந்தியாவிடம் ஒப்படைக்கிறதா அல்லது அமெரிக்காவிடம் ஒப்படைகிறதா என்பதை ஜெர்மன் அரசே முடிவு செய்யும் என சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு 10 ஆண்டுகள் சிறை