ராமநாதபுரம்: வரதட்சணை கேட்ட ஆண் வீட்டார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டாரிடம் வரதட்சணை - போலீஸ் விசாரணை!
கமுதி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டாரிடம் வரதட்சணையாக 25 பவுன் நகை, 5 லட்சம் ரொக்கப் பணம் கேட்ட மாப்பிள்ளை வீட்டார் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கமுதி அருகே கே.எம்.கோட்டையைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவருக்கும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்துள்ள பொன் செல்வன்(31) என்பவருக்கும் டிசம்பர் 2020இல் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனையடுத்து மணமக்கள் வீட்டார் திருமண ஏற்பாடுகளை துரிதமாக செய்துவந்தனர்.
இச்சூழலில், மாப்பிள்ளை பொன் செல்வன் 25 பவுன் நகையும், ரூ.5 லட்சம் பணமும் கேட்பதாக பிரியதர்ஷினி கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரளித்த புகாரின் பேரில் பொன்செல்வம், அவரது தந்தை செந்தூரப்பாண்டி, தாயார் பிரேமா ஆகியோர் மீது கமுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.