சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து பள்ளியில் நடந்த கலவரம், தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பாக சிறப்புப் புலனாய்வு போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களை அடையாளம் காணக் கோரியும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரியும், மதுரையைச்சேர்ந்த வழக்கறிஞர் பி.ரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், 'மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை கிருத்திகாவை, அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளிச்செயலாளர் மிரட்டுவதாகவும், அதனால் அவரை உடனடியாக திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்படுவதைத் தவிர்க்க, கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அவர்களுக்குத் தேவையான சட்ட உதவியை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் வழங்க அனைத்து மாஜிஸ்திரேட்களுக்கும் அறிவுறுத்தும்படி உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்’ எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இழப்பீடு கோரிக்கையுடன் உள்ள வழக்கை ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க முடியாது என்பதால், மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மனுதாரரின் கோரிக்கைகளுடன் வேறு வழக்காக தாக்கல் செய்யும்படியும் மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க:மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய காரணம் என்ன...சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி