வேலூர்:பென்னாத்தூர் பேரூராட்சிக்குள்பட்ட அல்லிவரம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்துள்ளது.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மார்கபந்து - மகாலட்சுமி தம்பதியினரின் நான்கு வயது மகன் லலித் வயிற்றுப்போக்கால் இன்று (டிச.3) உயிரிழந்தார். முன்னதாக, அதே பகுதியைச் சேர்ந்த 61 வயது முதியவர் அப்பாசாமி நேற்று (டிச.2) உயிரிழந்துள்ளார். நோய்த் தொற்று காரணமாக இவர்கள் உயிரிழந்ததாக பொது மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது.
இந்நிலையில் அல்லிவரம் கிராமத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் எ.பி.நந்தகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின் அல்லிவரம் கிராமத்தில் கணியம்பாடி ஆரம்பச் சுகாதார நிலையம் சார்பில் 5 மருத்துவர்களை உள்ளடக்கிய 30 பேர் கொண்ட மூன்று மருத்துவக் குழுக்களை நியமித்துச் சிறப்பு முகாம் அமைத்துள்ளனர். மேலும் கிராமம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வீடு வீடாகச் சென்று குடிநீர் மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனை கழிவால் நேர்ந்த சோகம்
தொடர்ந்து அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்து முன்னெச்சரிக்கையாக போதிய மாத்திரைகளை வழங்கி வருகின்றனர். காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. தற்போதைக்கு 2 படுக்கைகளுடன் கூடிய ஒரு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அல்லிவரம் கிராமத்தில் உள்ள குளத்து நீர் வெளியேற வழியின்றி தெருக்களில் தேங்குவதால் அங்குள்ள கால்வாயை அகலப்படுத்தி தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு வாகனம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து உயிரிழப்புக்குக் காரணமாக பொது மக்கள் கூறுகையில், அல்லிவரம் ஏரிக்கு வரும் நீரில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையின் கழிவு கலப்பதாகவும், அதிலிருந்து மீனைப் பிடித்து உண்ட முதியவர் அப்பாசாமி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் கூறுகையில், மீனைப் பிடித்து உண்டதால் முதியவர் உயிரிழந்திருக்கிறார். குழந்தை வயிற்றுப்போக்கால் உயிரிழந்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் மாதிரி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு தெரிந்த பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.
மேலும் அக்கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை செய்து வருவதாகவும் கூறினார். திடீரென இருவர் உயிரிழந்ததால் அல்லிகிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை இல்லை