தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 27, 2021, 11:10 PM IST

ETV Bharat / city

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சேகர் ரெட்டி மீது வழக்கு

வேலூர்: பத்திரப்பதிவில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேகர் ரெட்டி, sekhar reddy
அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சேகர் ரெட்டி மீது வழக்கு

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள முனிசாமி என்பவருக்கு சொந்தமான 5.88 ஏக்கர் அளவு நிலத்தை, ஏழு பேர் சேர்ந்து விலைக்கு வாங்கி விஐபி கார்டன் என்ற பெயரில் வீட்டு மனையாக ஆக்கியுள்ளனர். மனைகள் சரியாக விற்பனை ஆகாததால், அதில் இருந்து 5.27 ஏக்கர் நிலத்தை 7 பங்குதாரர்களும் தலா 75 சென்ட் வீதம் பத்திர பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலத்தை, பவர் ஏஜென்ட் பரசுராமன் மூலம் பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி, 75 சென்ட் நிலத்தை 25 லட்சத்து 60 ஆயிரம் என்ற விலையில் ஏழு பேரும் விற்றுள்ளனர். பின்னர், நிலத்தை குறைத்து மதிப்பிட்டு முத்திரை கட்டணம் செலுத்தியுள்ளதாக கூறி வேலூர் மாவட்ட துணை ஆட்சியருக்கு (முத்திரைக் கட்டணம்) அப்போதைய காட்பாடி சார்-பதிவாளர் சம்பத் பரிந்துரை செய்துள்ளார்,

இதனையடுத்து, அப்போதைய துணை ஆட்சியர் அப்துல் முனீர் ஒரு சென்ட் நிலத்தின் மதிப்பு 45 ஆயிரம் என மதிப்பிட்டு முத்திரை கட்டணத்தை வசூலித்துள்ளார். ஆனால், அரசின் நில வழிகாட்டு மதிப்பீட்டின்படி ஒரு சதுர அடிக்கு 600 ரூபாய் என, சுமார் 13 கோடியே 72 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள நிலத்தை 2 கோடியே 46 லட்சத்து 98 ஆயிரத்து 520 ரூபாய் மதிப்புக்கு சேகர் ரெட்டிக்கு பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக கூறி, அப்போதைய காட்பாடி சார்-பதிவாளர், தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் சார்-பதிவாளராக இருக்கும் சம்பத், அப்போதைய முத்திரைக் கட்டண துணை ஆட்சியரும் தற்போதைய தருமபுரி மாவட்டத்தின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளருமான அப்துல் முனீர், பவர் ஏஜென்ட் பரசுராமன், தொழிலதிபர் சேகர் ரெட்டி, நிலத்தை விற்பனை செய்த பங்குதாரர்கள் 7 பேர் உள்ளிட்ட 11 பேர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 'அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கிறது!'- உயர் நீதிமன்றம் பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details