நாடு முழுதும் சாலை விபத்துகளை தடுப்பதற்காக போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை இரண்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைகவசம் அணியாதவர்களுக்கு நூறு ரூபாயாக இருந்த அபராதத் தொகை தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில் வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் 'வேலூர் மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் இன்று முதல் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும்! இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.