திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணாநகரில் பெண் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. இந்த காவலர் பயிற்சி பள்ளியில் மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்டப் பகுதிகளில் புதிதாக தேர்வு செய்யப்படும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 450 பெண் புதிய காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
அதில் மதுரை உசிலம்பட்டி முத்துப்பாண்டிபட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகள் தங்கம் (24) என்பவரும் பயிற்சி பெற்று வருகிறார். இன்று(ஜூன் 8) காலை பயிற்சியின் போது துப்பாக்கியை தோளில் சுமந்துகொண்டு தடை தாண்டுதல் ஓடியபோது தங்கம் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்பொழுது துப்பாக்கியின் முன்பகுதியில் உள்ள பைனட் எனப்படும் கத்தியை அவரது இடுப்பில் கட்டியிருந்துள்ளார்.
தடுமாறி கீழே விழுந்த பொழுது அந்த கத்தி தங்கத்தின் தொடையில் உறையை பிய்த்துக்கொண்டு குத்தியது. இதனால் தங்கம் துடிதுடித்து அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்ட சக காவலர்கள் ஓடிவந்து தங்கம் தொடையில் குத்தி இருந்த கத்தியை அகற்ற முற்பட்டபோது, முடியாமல் போகவே உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் தங்கத்தை சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது கத்தி வயிற்றுபகுதிக்குள் இருப்பதால், அறுவை சிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக நவல்பட்டு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் நவல்பட்டு பெண் காவலர் பயிற்சி பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம்: அயனாவரம் காவல் ஆய்வாளர் இடமாற்றம்