இந்திய வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் இன்று தேசிய அளவிலான மாநாடு திருச்சி ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது. இதில் டாக்டர்கள் பிரவீன், செந்தாமரை, அலமேலு, வெங்கட்ராமன், திருவேங்கடம், செயலாளர் உமாபதி உட்பட பலர் உரையாற்றினர். மேலும், வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்களுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியும் நடந்தது.
வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட வலியுறுத்தல்!
திருச்சி: வெண்புள்ளி தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இன்று நடைபெற்ற அதன் விழிப்புணர்வு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இது குறித்து வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் செயலாளர் உமாபதி கூறுகையில், "வெண்புள்ளி தாக்குதல் என்பது நோய் கிடையாது. இது சிறிய அளவிலான குறைபாடு மட்டுமே! இந்த குறைபாட்டுக்கான சிகிச்சை முறையை தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
வெண்புள்ளிகள் குறித்து 11ஆம் வகுப்பு விலங்கியல் பாடத்தில் மட்டும் சிறிய அளவில் இடம் பெற்றுள்ளது, இதை அனைத்து பாடத்திட்டங்களிலும் இடம்பெற செய்ய வேண்டும். வெண்புள்ளிகள் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுவது கிடையாது, மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மருந்தை கண்டுப்பிடித்துள்ளது. இதனால் இந்த நடைமுறையை மாற்றி அவர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன" என்றார்.