மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக முருகானந்தம். இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மத்திய நிர்வாகக் குழுக்கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் முருகானந்தம் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்தநிலையில், இன்று(மே.19) திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார் முருகானந்தம். அப்போது அவர், "மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகள் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தும், அனைத்து பொறுப்புகளிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் உடனடியாக ராஜினாமா செய்கிறேன்.
நடந்து முடிந்த தேர்தலில் கமல்ஹாசன் தன்னிச்சையாகப் பலவீனமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது, யாரையும் கேட்காமல் 100 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்தது போன்ற காரணங்களால் கட்சி படுதோல்வி அடைந்தது. தேர்தலுக்கு முன்பு 3.4 சதவீத வாக்கு வங்கி கட்சிக்கு இருந்தது.
தேர்தலுக்குப் பிறகு இது 6.8 சதவீதமாக உயரும் என்று பலராலும் கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் 2.4 சதவீதமாக குறைந்து விட்டது. இதற்கு கட்சியின் தலைமை தான் காரணம். எங்களது கட்சி என்ற நிலைப்பாட்டிலிருந்து எனது கட்சி என்ற நிலைப்பாட்டை கமல்ஹாசன் எடுத்தது தான் காரணம்.