திருச்சி:பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் மார்ச் 5ஆம் தேதியும், நிதிக்குழு கூட்டம் 8ஆம் தேதியும், செனட் கூட்டம் 10ஆம் தேதியும் அடுத்தடுத்து நடந்தன.
கூட்டத்தில் பல்கலைக்கழக ஆராய்ச்சித்துறையில் உள்ள பல பிரச்னைகள் குறித்து உறுப்பினர்கள் பட்டியலிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், இயக்குநர் முத்துசாமிக்கு பதவி நீட்டிப்பு மட்டும் வழங்கினர். இது பல்கலைக்கழக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிதிப்பற்றாக்குறையில் பல்கலைக்கழகம்
நிதிக்குழு கூட்டத்தில் 2021-22ஆம் கல்வியாண்டில், இப்போதைய நிலவரப்படி ரூ. 30 கோடி நிதி பற்றாக்குறை இருப்பதாகத் தெரிகிறது. இந்த கல்வியாண்டில் ஓய்வுபெறும் பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதிய பலன்கள் வழங்க ரூ. 20 கோடி கூடுதலாக தேவைப்படும். ஆக மொத்தம் ரூ. 50 கோடி பற்றாக்குறையில் பல்கலைக்கழக நிதி நிலைமை இருப்பதாக கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டிய தொகுப்பு நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை அரசு விடுவிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், கூட்டத்தில் பங்கேற்ற அரசு செயலர், இப்போதைக்கு எந்த நிதியும் வழங்க முடியாது. அரசின் நிதிநிலைக் கூட்டத்துக்கு பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டார் எனத்தெரிகிறது.
இதேபோல் 54 பேராசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி கோரப்பட புதிதாக ஆசிரியர்கள் நியமனம் செய்தால், பல்கலைக்கழகத்துக்கு ரூ. 8 கோடி கூடுதல் செலவு ஏற்படும். எனவே, அதை கிடப்பில் வையுங்கள் என்று அரசு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சிண்டிகேட் கூட்டத்தில் அதன் உறுப்பினராக உள்ள தனியார் கல்லூரி செயலாளர் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில், 'கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், முதல்வர்களின் மறுவேலை வாய்ப்பிற்கான வயது வரம்பை 65-லிருந்து 70ஆக உயர்த்த ஆட்சிக்குழு பரிந்துரைக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவிக்க, இதுகுறித்து அரசு என்ன கொள்கை முடிவு எடுக்கிறதோ அது பின்பற்றப்படவேண்டும் எனக்கூறி, இந்தப் பிரச்னைக்கு அரசு செயலர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
கரோனா காலம் முதலே அரசின் நிதி சரிவர வழங்கப்படவில்லை எனக்கூறுவதோடு இந்தப் பிரச்னை, துணை வேந்தராக இருந்த மீனா காலத்திலேயே தொடங்கிவிட்டதாக சிலர் கூறினர்.
'போகிற போக்கைப்பார்த்தால் அரசுப்போக்குவரத்துக்கழகம் போல பல்கலைக்கழக நிலத்தை அடமானம் வைத்துதான் நிதிநிலையை சரிகட்ட வேண்டும்போல..' எனக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் மனம் குமுறிய நிலையில் கலைந்து சென்றிருக்கிறார்களாம்.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் 'தானியங்கி தகவல் பரிமாற்று இணைப்பு கருவி' தொடக்கம்