திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும் வகையிலும், அவர்களின் தரத்தை முன்னேற்றும் நோக்கிலும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் பள்ளிக்கு தேவையான எழுதுபொருட்கள், அலுவலக உபகரணங்கள் ஆகியவைகளை கிராம மக்கள் பள்ளிக்கு சீர்வரிசையாக அளிக்கும் விழா இன்று நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு குவிந்த சீர்வரிசை!
திருச்சி: மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசையை பொதுமக்கள் கொண்டு வந்தனர்.
இவ்விழாவில் பேனா, பென்சில், அழிப்பான், நோட்டு புத்தகங்கள், குடிநீர் டிரம், செம்பு பானைகள், டம்ளர், டேபிள், சேர், பெஞ்ச், பீரோ, மின்விசிறிகள், குப்பைக் கூடைகள், விளையாட்டு உபகரணங்கள், மேஜை விரிப்புகள், பாய் உள்ளிட்ட சீர்வரிசைகளை தலைகளில் சுமந்தபடி தாரை தப்பட்டை முழங்க பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
இதனையடுத்து சீர்வரிசைகளை எடுத்து வரும் கிராம மக்களை பள்ளியின் தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி தலைமையில் பன்னீர் தெளித்து, சந்தனம், குங்குமம் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர்.