திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலையில் அரசு பேருந்து பணிமனை எதிரே தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு பல்லடத்தை சேர்ந்த செந்தில் என்பவர் துணி கடையும், ஷர்மிளா என்பவர் செல்ஃபோன் கடையும் நடத்தி வருகின்றனர். அருகருகே இரும்புக்கடை, மகேந்திரா ஷோ ரூம் மற்றும் ஒரு மளிகை கடை உள்ளது.
இந்த ஐந்து கடைகளிலும் நேற்று இரவு 2 அடையாளம் தெரியாத நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று துணிக்கடையில் துணிகளையும், செல்ஃபோன் கடையில் செல்ஃபோன், செல்ஃபோன் சார்ஜர்கள், கேமரா, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மகேந்திரா ஷோ ரூமிற்குள் புகுந்தவர்கள் அங்கிருந்த இருசக்கர வாகன உதிரி பாகங்கள், இரும்பு கடையிலிருந்து இரும்புகள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை : சிசிடிவி காட்சியில் சிக்கிய முகமூடி திருடர்கள் இன்று காலை உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர்கள் பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
காவல் துறையினர் வந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தபோது இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் முகமூடி அணிந்து வந்து ஒரு கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு நபர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்த ஐந்து கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க:தாம்பரத்தில் பேன்சி ஸ்டோரின் பூட்டை உடைத்து கொள்ளை!