தூத்துக்குடி: கோவில்பட்டி கிழக்கு பூங்கா சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார்(வயது 30). இவர் நேற்று முன்தினம் (மார்ச் 19) மாலை கோவில்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்த வெங்கடாசலபதி (50) என்பவருக்கு சொந்தமான அச்சகத்திற்கு மதுபோதையில் சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார்.
பின்னர் இதனால் ஏற்பட்ட தகராறில் வெங்கடாசலபதியும் அவரது உறவினரான கோவில்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்த கோபிநாத்தும் (35) சேர்ந்து ராம்குமாரை ஏ.கே.எஸ். தியேட்டர் ரோடு அருகில் கத்தியால் தாக்கி கொலை செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராம்குமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் கலைகதிரவன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.
தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் கோவில்பட்டி வ.உ.சி நகரை சேர்ந்தவர்களான வெங்கடாசலபதி, கோபிநாத் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா எனவும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
இதையும் படிங்க:அச்சகத் தொழிலாளி குத்திக்கொலை: சிசிடிவி கொண்டு விசாரணை!