தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த முதல் நிலை காவலர் குறித்த உருக்கமான தகவல்...!

தூத்துக்குடி: திருமணமாகி ஓராண்டிலேயே வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் குறித்த உருக்கமான தகவல்கள் தொடர்பான செய்தித் தொகுப்பு...

subramanian
subramanian

By

Published : Aug 19, 2020, 12:15 AM IST

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுக்காவுக்கு உட்பட்ட பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(25). இவர், ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட இவர், தூத்துக்குடி ஆயுதப்படையில் காவலராக பணியில் சேர்ந்தார். இதைத்தொடர்ந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தார்.

இதற்கிடையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏரல் வாய்க்கால் கரையோரம் அருகே நடைபெற்ற கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான துரைமுத்து என்பவர் தலைமறைவாகி இருந்தார். அவரை காவல்துறையினர் பல்வேறு இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிவரும் வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு தனிப்படை பிரிவு அமைக்கப்பட்டு துரைமுத்துவை காவல்துறையினர் தேடிவந்தனர்.

இந்நிலையில், அவர் முறப்பநாடு அருகே மணக்கரை பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்று துறை முத்துவை பிடிக்க காவல்துறையினர் முற்பட்டனர். அப்போது, தப்பிச் செல்ல முயன்ற துரைமுத்துவை தனிப்பிரிவு காவலர் சுப்பிரமணியன் துரத்திச் சென்று கைது செய்ய முயற்சித்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை துரை முத்து வீசியதில், காவலர் சுப்பிரமணியனின் தலையில் பட்டு வெடித்தது. இதில், அவர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இதில் படுகாயமடைந்த துரைமுத்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் கொல்லப்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு செய்து தடயங்களை சேகரிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து வெடிகுண்டு சம்பவத்தில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியின் உடல் கைப்பற்றப்பட்டு உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த சுப்பிரமணியனுக்கு திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவியும், ஒரு வயதில் ராம்ஜி என்ற குழந்தையும் உள்ளனர். சுப்பிரமணியனுக்கு மூத்த சகோதரர் ஒருவரும், இளைய சகோதரர், சகோதரியும் உள்ளனர். சிறுவயது முதலே காவல் பணியின் மீது கொண்ட காதலால் கடுமையான பயிற்சிகள் எடுத்துக்கொண்ட சுப்பிரமணியன் மிகுந்த எதிர்பார்ப்புகளோடும், கனவுகளோடும் தமிழ்நாடு காவல் பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

சிறுவயதிலேயே சுப்பிரமணியன் தனது தந்தையை இழந்தவர் என்பதால் குடும்ப பாரத்தை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறுவயது முதலே பொறுப்புடன் இருந்து வந்துள்ளார். தந்தை அரவணைப்பு இல்லாமல் நான்கு பிள்ளைகளையும் வளர்க்க அவருடைய தாயார் படும் கஷ்டங்களை பார்த்து தாங்கிக்கொள்ள இயலாத சுப்பிரமணியன், தான் விரைவில் நல்ல வேலைக்குச் சென்று குடும்ப கஷ்டத்தை நீக்குவேன் என அடிக்கடி சொல்லுவதுண்டு என அவருடைய நண்பர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இவ்வளவு சீக்கிரம் சுப்பிரமணியன் எங்களைவிட்டு பிரிந்து சென்று தாங்கொணா துன்பத்தில் எங்களை ஆழ்த்தி விட்டதாக அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.

இந்நிலையில், காவலர் சுப்பிரமணியனின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details