தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக சரண்யா அரி இன்று (பிப். 8) பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தூத்துக்குடி மாநகராட்சியில் நிலவிவரும் மழைநீர் வடிகால் மற்றும் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஜெயசீலன், திடீரென சென்னை சர்வே மற்றும் நில ஆவணம் பிரிவு கூடுதல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் உதவி ஆட்சியராக பணியாற்றி வந்த சரண்யா அரி ஆணையராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டவர் வி.பி.ஜெயசீலன். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சைக்கிள் ஸ்டாண்டு குத்தகை, கழிப்பறை, குளியலறை குத்தகை என பல்வேறு டெண்டர்களை ஒழித்து அனைத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மாநகராட்சியின் நேரடி கண்காணிப்பில் கொண்டு வந்தார்.