நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் சிவா என்ற சிவக்குமார் (வயது 40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருடைய சகோதரன் முத்துக்குமார் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2005ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தில் பச்சைபெருமாள் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிவகுமார் முதல் குற்றவாளி என வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக வந்த சிவக்குமாரை அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல் சொலை செய்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், நகர துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சிவக்குமாரின் கொலை குறித்து விசாரணை நடத்தினர். இதில் சிவக்குமாரை கொலை செய்தது பச்சைபெருமாளின் தம்பி ராஜேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 10 பேர் என்பது தெரியவந்தது.
கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த காவல்துறையினர் பழிக்குப்பழி வாங்கும் சம்பவமாக நடைபெற்ற இந்த கொலை குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை பற்றி துப்பு துலக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.