தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பேரணியாகச் சென்ற பொழுது ஏற்பட்ட கலவரத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழ்நாடு அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசாணை பிறப்பித்து ஆலையை மூடியது.
அதனைத் தொடர்ந்து, ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் சமூகநல நிதியின் கீழ் ஆறு அம்ச மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதற்கு அந்நிறுவனம் முனைப்புக் காட்டிவருகிறது.
ஆலைக்கு எதிராக போராடும் பண்டாரம்பட்டி ஊர் பொது மக்கள் குறிப்பாக ஸ்டெர்லைட் நச்சால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று சொல்லப்படும் பண்டாரம்பட்டி, குமரெட்டியாபுரம், சில்வர்புரம், தெற்கு வீரபாண்டியபுரம் உள்ளிட்ட இடங்களில் ஸ்டெர்லைட் ஆலையின் சமூகநல நிதியின் கீழ் பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மரக்கன்றுகள் நடுவது, பெண்களுக்கு வேலை வாய்ப்புப் பயிற்சி அளித்தல், தொழில் முனைவோர்களை உருவாக்குதல், குறைந்த கட்டண செலவில் தரமான கல்வி வழங்குதல் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பண்டரம்பட்டியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை சமூகநல நிதியின் கீழ் பண்டாரம்பட்டியை சுற்றிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு மரக்கன்றுகள் இறக்கி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால்ஆத்திரமடைந்த பண்டாரம்பட்டி பொதுமக்கள் ஊர் நடுவே உள்ள கோவில் பொதுத்திடலில் ஒன்றாக கூடி நேற்றிரவு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலை நிதி உதவி அளிப்பதை தடுத்து நிறுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம் இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பண்டாரம்பட்டி பொது மக்களில் ஒருவரான வசந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பண்டாரம்பட்டி ஊரில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கியதாக பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. இதற்கு பண்டாரம்பட்டி ஊர் பொது மக்களாகிய நாங்கள் முற்றிலும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மேலும் சமூகநல நிதியின் கீழ் மரக்கன்றுகள் நடுவதற்கு நிர்வாகத்தினர் மரக்கன்றுகளை கொண்டு வந்துள்ளனர்.
அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை நடவடிக்கைகளுக்கு பண்டாரம்பட்டி ஊர் பொதுமக்கள் என்றைக்குமே ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம். ஆலைக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். ஸ்டெர்லைட் ஆலை நிதி உதவி அளிப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் நாங்கள் பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பண்டாரம்பட்டியைச் சேர்ந்த வசந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது இனியும் தாமதிக்காமல் ஸ்டெர்லைட் ஆலை மூலம் வரும் நிதி உதவிகளை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்தினால் பயன்பெற்றதாக செய்தி வெளியிட்டவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிட வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் அமைதி வழியில் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்தனர்.