தமிழ்நாடு

tamil nadu

மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் கொத்து கொத்தாக மடிந்த சோகம்!

விளாத்திகுளம் அருகே மழையினால் சேதமடைந்த சோளப் பயிர்களைத் தின்ற 100க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. ஆடுகளின் இறப்புக்குச் சரியான காரணம், உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகே தெரியும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

By

Published : Jan 31, 2021, 7:57 AM IST

Published : Jan 31, 2021, 7:57 AM IST

More than 100 sheep have died in vilathikulam
More than 100 sheep have died in vilathikulam

தூத்துக்குடி: மேய்ச்சலுக்குச் சென்ற 100க்கும் மேற்பட்ட செம்மறியாடுகள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவில்பட்டி, விளாத்திகுளம் அருகேயுள்ள வவ்வால்தொத்தி கிராமத்தில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான் மிக முக்கிய தொழில். இந்த கிராமத்தில் அதிகளவில் செம்மறி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக விளைச்சல் நன்றாக இருந்தபோதும், அறுவடை செய்யமுடியாமல் சோளப் பயிர்கள் மழைநீரில் முழ்கி முளைத்துவிட்டன.

இதனால் விவசாயிகள் சேதமடைந்த பயிர்களை அழித்து விட்டு நிலங்களைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் அக்கிராமத்திலுள்ள செம்மறி ஆடு வளர்ப்போர், மழையினால் சேதமடைந்த நிலங்களிலுள்ள பயிர்களில், ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டுள்ளனர். இவ்வேளையில், சோள பயிர்களை உண்ட செம்மறி ஆடுகளின் வயிறு திடீரென வீக்கம் அடைந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்டின் உரிமையாளர்கள், தங்களுக்குத் தெரிந்த வீட்டு வைத்தியத்தினை முயற்சி செய்து பார்த்துள்ளனர். ஆனால் அவை எவ்வித பலனும் கொடுக்காமல் ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. அந்த கிராமத்தினைச் சேர்ந்த காளிமுத்து, பரமசிவம், முனிஸ்வரி, கண்ணன் ஆகியோருக்குச் சொந்தமான சுமார் 150 ஆடுகள் பரிதாபமாக இறந்துள்ளன.

மேலும், 200க்கும் மேற்பட்ட ஆடுகள் வயிறு வீக்கம் ஏற்பட்டுப் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த ஆடுகள் ஒவ்வொன்றும் 8 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை மதிப்பு இருக்கும் என்றும், உயிரிழந்த ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் 15 லட்சம் ரூபாய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் கிடைத்தும் கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநர் சம்பத் தலைமையில், கால்நடைத் துறை உதவி இயக்குநர் சங்கரநாரயணன் மேற்பார்வையில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர்கள் ஆடுகளுக்கு உடற்கூராய்வு செய்தனர்.

அப்போது, சோளத்தில் மாவுச் சத்து அதிகமாக உள்ளதால், அதனை சாப்பிடும் போது சில பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளது. அதனால் ஆடுகள் இறந்திருக்கலாம். உடற்கூராய்வு பரிசோதனைக்குப் பின்னர் தான் ஆடுகள் இறப்பிற்கு என்ன காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியும் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு வரும் ஆடுகளுக்குக் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details