தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் திமுக எம்.எல்.ஏக்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், சண்முகையா ஆகிய மூவரும் கரோனா நோய்த்தடுப்பு குறித்து விளக்கம் கோரி இன்று மனு அளித்தனர்.
பின்னர் எம்.எல்.ஏக்கள் மூவரும் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சுமார் 20 லட்சம் மக்கள் உள்ள இம்மாவட்டத்தில், கரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சோதனைகள், எவ்வளவு படுக்கைகள் உள்ளன, எவ்வளவு மருத்துவர்கள் உள்ளனர், எவ்வளவு பிசிஆர் கருவிகள் வந்தன, யாருக்கெல்லாம் அது பயன்படுத்தப்பட்டது, யாரெல்லாம் அதிலிருந்து குணமடைந்தனர், எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்கிற எந்த விவரமும் எங்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியவில்லை.
மாவட்டத்தில் கரோனா தொற்று மிக வேகமாகப் பரவிக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் பணிகள் அறவே முடங்கிப்போய் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து வருபவர்களை சோதனைச்சாவடிகளில் தடுத்து நிறுத்தி, தனிமைப்படுத்தியிருந்தாலே இந்தத் தொற்றை குறைத்திருக்க முடியும். எனவே, சரியான முறையில் சோதனை நடத்தாத காரணத்தால் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஆகவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, 32 கேள்விகள் அடங்கிய மனுவை இன்று மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளோம்' என்றனர்.
இதையும் படிங்க:கரோனா பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்துக- சு.வெங்கடேசன்