தூத்துக்குடி: கோவில்பட்டி சாலை புதூரைச் சேர்ந்த செவிலியர் பட்டயப் படிப்பை முடித்த இளம்பெண் ஒருவர் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள முரளி மருத்துவமனையில் செவிலியராக கடந்த 20 ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், மருத்துவர் முரளி, செவிலியர் பெண்ணுக்கு கடந்த ஒரு வாரமாக தினமும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் செவிலியர் மருத்துவரின் மனைவியும், பெண் மருத்துவரான விமலா தேவியிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் உரிய விசாரணை நடத்தாமல் ஒருதலைபட்சமாகச் செவிலியர் பெண்ணை இழிவுபடுத்தி வெளியேற்றியுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த பாதிக்கப்பட்ட செவிலியர் தனது வீட்டில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.