தமிழ்நாடு

tamil nadu

மினிகாய் தீவு அருகே கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 10 பேர் விடுதலை!

By

Published : Nov 24, 2020, 8:58 PM IST

மினிகாய் தீவு கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்ட, தூத்துக்குடியைச் சேர்ந்த 10 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை தூத்துக்குடி தருவைகுளத்திற்கு வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

thoothukudi-fishermen
thoothukudi-fishermen

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா, தருவைக்குளம் மீன்பிடி இறங்குதளத்தை தங்குதளமாகக் கொண்டு, மரிய குணசேகரன் என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான விசைப்படகில், தருவைக்குளத்தைச் சேர்ந்த சேயராஜன், அந்தோணி ராஜ், தீபன், ஜோசப், மரிய குணசேகரனின் மகன் ஜாண்சன் (படகு ஓட்டுனர்), வேம்பாரை சேர்ந்த வின்சன், சின்ராஜ், சிலுவைப்பட்டியை சேர்ந்த அந்தோணி பிச்சை, விஜய், நெல்லை மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்த ரோஸ்டன் ஆகிய 10 மீனவர்கள், கடந்த 18 ஆம் தேதி, மினிகாய் தீவு கடற்பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆழ்கடலில் ரோந்து வந்த மினிகாய் தீவு கடலோரக் காவல் படையினரால், தருவைக்குளம் மீனவர்கள் 10 பேரும் சிறைபிடிக்கப்பட்டனர். இதையடுத்து, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுத் தரவேண்டுமென அவர்களின் குடும்பத்தினர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.


சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பரிந்துரை செய்தனர். அதனடிப்படையில் சிறைபிடிக்கப்பட்ட 10 மீனவர்களையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, மீனவர்கள் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும், நாளை அதிகாலை தூத்துக்குடி தருவைக்குளம் தங்குதளத்திற்கு வந்து சேர்வார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவரின் வாரிசுக்கு அரசு வேலை - பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details