திருநெல்வேலி:சமீப நாள்களாக பள்ளி மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது, தாக்க முற்படுவது, இருக்கைகளை உடைப்பது, போதை வஸ்துக்களை அருந்துவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த செயல்கள் அனைத்து தரப்பினரிடமும் விவாதத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், அதற்கு நேர்மாறாக திருநெல்வேலி சந்திப்பில் உள்ள புகழ்பெற்ற பாரதியார், வ.உ.சி உள்ளிட்டோர் பயின்ற மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்களது செயல்பாடுகள் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
முன்மாதிரியாக விளங்கும் மாணவர்கள்: 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஒன்றிணைந்து தாங்கள் பயிலும் வகுப்பறைகளை தங்களுக்கு பின்னர் வரும் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக வகுப்பறைச் சூழலை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் வகுப்பறையை வண்ணம் தீட்டுவது, மின்விசிறி வாங்கிக் கொடுப்பது, மாணவர்கள் பயில தேவையான இருக்கைகளை ஏற்பாடு செய்து கொடுப்பது என்று பள்ளி பருவத்தை முடித்து கல்லூரி வாழ்க்கை தொடங்கும் முன் தாங்கள் பயின்ற பள்ளியை சீரமைத்துக்கொடுத்து, இதர மாணவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகின்றனர்.
வைரலாகும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் நெல்லை மாணவர்கள்... ஏன் தெரியுமா? பாராட்டு:12ஆம் வகுப்பு ஈ பிரிவு மாணவர்கள் ஒன்றிணைந்து தங்கள் வகுப்பறையை சீரமைப்பது குறித்த முடிவை எடுத்து தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்து அவர்களின் ஒப்புதலோடு இந்த நற்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவும் அதேவேளையில் தாங்கள் அப்படியில்லை மற்ற மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருப்போம் என்பதற்கு ஏதுவாக மாணவர்களின் செயல் அமைந்துள்ளது. இது அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது
இதையும் படிங்க: EXCLUSIVE: படகு இருக்கு டீசல் இல்லை.. ரேஷன் வாங்க காணி மக்கள் நடுக்காட்டில் திகில் பயணம்!