திருநெல்வேலி மாவட்டம், நீதிமன்றம் அருகேயுள்ள சாலையோரம் மாடசாமி (வயது 58) என்பவர், அவரது மகன்களான மாசாணம் (33), பேச்சிமுத்து (31) ஆகியோருடன் பழக்கடை, இளநீர் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், அதே பகுதியில் ஜேம்ஸ் என்பவர் தள்ளுவண்டியில் வைத்து பேரிக்காய் விற்பனை செய்து வந்தார்.
இதனால், தங்களுக்கு வியாபாரம் பாதிப்பதாகக் கூறி மாடசாமி மற்றும் அவரது மகன்கள் ஜேம்ஸிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, மாடசாமி மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து ஜேம்ஸை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில், பலத்த காயமடைந்த ஜேம்ஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில், அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள், இது குறித்து தகவலறிந்து உடனடியாக மாடசாமி மற்றும் அவரது மகன்கள் மாசானம், பேச்சிமுத்து ஆகிய மூவரை கைது செய்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை காவல் துறையினர் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழக்கடை நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.