திருநெல்வேலி: அதிமுகவின் அம்மா பேரவை உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் பேசிய அமைச்சர், “பொதுமக்களின் உணர்வுகளை அவர்களுடன் களத்தில் நின்று தெரிந்து கொள்வதுதான் தலைவனுக்கு அழகு. அப்போதுதான் நல்ல தலைவனாக இருக்க முடியும். அதை விட்டுவிட்டு ஏஜென்சி வைத்து மக்களை பற்றி தெரிந்து கொள்பவர் சரியான தலைவராக இருக்க முடியாது.
காமராஜரோ, எம்ஜிஆரோ ஏன் கருணாநிதி கூட ஏஜென்சி வைத்து மக்கள் உணர்வுகளை தெரிந்து கொள்ளவில்லை. எட்டு மாதத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என திமுக ஒரு கனவு கண்டு கொண்டிருக்கிறது, நீங்கள் செய்த நில அபகரிப்பு, குடும்ப ஆதிக்கத்தை நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் வலிமையை அதிமுக பெற்றுள்ளது.
மக்களின் மனநிலையை தெரிந்துகொள்ள ஏஜென்சிகளை நாடும் திமுக திமுக ஒரு குடும்பக் கட்சி என்று பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வருகின்றன. அதை மெய்பிக்கும் விதமாக திமுகவில் கொடுக்கப்படும் பதவிகள் இருக்கின்றன. அங்கு ஜனநாயகம் என்பது அறவே கிடையாது. காலையில் கண்விழிப்பது முதல் உறங்குவது வரை அறிக்கை வெளியிட மட்டும் தான் ஸ்டாலினுக்கு தெரியும். அப்படியாக அவர் ஒரு அறிக்கை நாயகனாகத் திகழ்கிறார்.
அதுமட்டுமில்லாமல், ஜூம் செயலி மூலம் மக்கள் குறைகளை ஜூம் செய்து பார்த்துக்கொண்டிருக்கிறார். களத்தில் இறங்கி போராட கூட பலமில்லை ஒரு கட்சி தலைவனுக்கு” என்று கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.