திருநெல்வேலி:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பள்ளி ஆசிரியர்கள் பட்டினி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் கரோனா தாக்கமும், அதன்மூலம் அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கானோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக தனியார் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் இன்று பட்டினிப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கையில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள், கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அரசு 10,000 ரூபாய் வாழ்வூதியம் வழங்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.