நாடு முழுதும் கரோனா ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மே 4ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் சில அத்தியாவசிய சரக்கு போக்குவரத்து மட்டும் தற்போது தொடங்கியுள்ளது. இருப்பினும் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து தொடங்கவில்லை. பேருந்துகள் இயங்காததால் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள், முதியவர்கள், இருசக்கர வாகனங்கள் இல்லாத ஏழை குடும்பத்தினர், அவசர உதவிக்காக பல இடங்களுக்கு சென்று வர முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே அரசு பேருந்துகள் எப்போது இயங்கும் என்ற எதிர்பார்ப்பில் கிராமத்து பொதுமக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி மண்டலத்தில் பணிமனைகளில் தினமும் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அரசு உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் பேருந்துகளை இயக்க தயாராக உள்ளதாகவும் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருநெல்வேலி மண்டல போக்குவரத்து கழக மேலாளரிடம் கேட்டபோது, "நெல்லை மண்டலத்தில் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளை தினமும் முறையாக பராமரித்து வருகிறோம். பேருந்துகள் நீண்ட நாட்கள் இயங்காமல் இருந்தால் பழுதாகி விடும் என்பதால் தினமும் காலை மாலை இருவேளையும் பணிமனைகளுக்குள் பேருந்துகளை இயக்கி வருகிறோம். அரசு தரப்பில் தயாராக இருக்கும்படி தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கிறது. எனவே அரசு உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் பேருந்துகளை இயக்க தயாராக உள்ளோம்.