திருநெல்வேலி:பாரதி பயின்ற வகுப்பறையில் அமர்ந்து படிப்பதை எட்டாவது அதிசயமாக கருதுகிறேன் எனவும், பாரதியாரின் எழுத்துகளால் தான் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து வருகிறார்கள் எனவும் பாரதி பயின்ற பள்ளியில் பயிலும் மாணவிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தில் பாரதியாரை பெருமையுடன் நினைவு கூர்வதாகவும் கூறுகின்றனர்.
ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்த நாம், சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்து முக்கால் நூற்றாண்டு நிறைவடைந்துள்ளது. நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடயிருக்கும் நிலையில், இந்த அற்புதமான தருணத்தில் நமது சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களையும், தலைவர்களையும் நினைவுகூர வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.
அந்த வகையில் நெல்லைச் சீமை என்று அழைக்கப்படும் திருநெல்வேலியில் எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களும் தலைவர்களும் உருவாகி இருப்பது இம்மாவட்ட மக்களின் பெருமையாக உள்ளது. குறிப்பாக வ.உ.சிதம்பரனார், பாரதியார், கட்டபொம்மன், பூலித்தேவன் என சுதந்திரப்போராட்டத்தில் தொடர்புடைய பல்வேறு தலைவர்கள் நெல்லைச்சீமையிலிருந்து வந்தவர்கள். அதில் மிக முக்கியமாக கருதப்படுபவர், சுப்பிரமணிய பாரதியார். ஆயுதங்கள் ஏந்தி போராடிய வீரர்களுக்கு மத்தியில் தன் எழுத்துகளால் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவர் தான், பாரதியார்.
நெல்லையில் ஆங்கிலேயருக்கு தொல்லை கொடுத்த முண்டாசு கவிஞன்:மகாகவி முண்டாசு கவிஞன் என்று போற்றப்பட்ட பாரதியார், அப்போதைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின், எட்டயபுரத்தில் 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை சின்னச்சாமி ஐயர், எட்டயபுரம் அரண்மனையில் பணிபுரிந்தார். சிறு வயது முதலே பாரதியார் அறிவும் ஆற்றலும் மிக்கவராகத் திகழ்ந்தார். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டிருந்த நிலையில் ஒரு முறை எட்டயபுரம் அரண்மனையில் புலவர்களுக்கு மத்தியில் கவிதைகள் பாடி அசத்திய காரணத்தால் எட்டயபுரத்து அரசர், இவருக்கு ’’பாரதி’’ என்று பட்டப்பெயர் சூட்டி மகிழ்வித்தார்.
குடும்ப வறுமை காரணமாக சின்னச்சாமி ஐயர் தனது மகன் பாரதியாரை இப்போதைய திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் உள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்பி படிக்க வைத்தார். அங்கிருந்தபடி பாரதியார் திருநெல்வேலி சந்திப்பில் அமைந்துள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் ( மதிதா) ஐந்தாம் படிவம் என்கிற பத்தாம் வகுப்பு வரை படித்தார். பாரதியாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்று வரை இப்பள்ளியில் அவரது நினைவுகள் போற்றப்பட்டு வருகிறது.
பாரதி பயின்ற பாடசாலையில் பாவையருக்கு மட்டுமே அனுமதி:குறிப்பாக பாரதி பயின்ற வகுப்பறையை நாற்றங்கால் எனப் பெயரிட்டு பராமரித்து வருகின்றனர். அதாவது நாற்றங்கால் என்றால் அடுத்தடுத்து பயிர்களை உற்பத்தி செய்யக்கூடியது என்பதால் அடுத்த தலைமுறையினரை உருவாகக்கூடிய இடமாக கருதி, நாற்றங்கால் எனப் பெயரிட்டுள்ளனர். இப்பள்ளியில் ஆண், பெண் இருபாலரும் படித்து வருகின்றனர். ஆனால், பாரதியார் பெண் விடுதலைக்காக பாடுபட்டவர் என்பதால் அவர் படித்த வகுப்பறையில் மாணவிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
குறிப்பாக பாரதியார் அந்த வகுப்பறையில் தான் பத்தாம் வகுப்பு படித்தார். எனவே, தற்போது வரை இந்த வகுப்பறையில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். மேலும் இந்த வகுப்பறைகளுக்குள் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் உட்பட யாரும் செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்பது சிறப்பு அம்சமாகும். எனவே, தினமும் மாணவர்கள் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் செல்லும்போது செருப்புகளை வெளியே கழற்றிவிட்டு தான் உள்ளே செல்கின்றனர். வாசல் முதல் உள்ளே சுற்றுச்சுவர் வரை திரும்பும் இடமெல்லாம் பாரதியின் பாடல்களும் கவிதைகளும் அவரது உருவப் படங்களும் வகுப்பறையை அலங்கரிக்கின்றன.
பாரதியின் பாடல் வரிக்கேற்ப வகுப்பறையில் பயிலும் மாணவர்களும் வீரப்பெண்மணிகளாகவே திகழ்கின்றனர். பேச்சிலும் சரி, படிப்பிலும் சரி பாரதியாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாணவர்கள் திகழ்கின்றனர். பேப்பர் கரைசல் மூலம் மாணவர்கள் வரைந்த பாரதியாரின் ஓவியம் வகுப்பறையில் தொங்க விடப்பட்டுள்ளது. அதேபோல் வ.உ.சிதம்பரனார், புதுமைப்பித்தன் போன்றோரும் இந்த வகுப்பறையில் தான் படித்தார்கள். எனவே, அவர்களது உருவப்படமும் வகுப்பறைக்குள் இடம் பெற்றுள்ளது.