தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏற்றுவேன்' - சசிகலா

அதிமுக தொண்டர்களின் உதவியுடன் தமிழ்நாட்டில் அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏற்றுவேன் என்று எடப்பாடியில் சசிகலா தெரிவித்தார்.

By

Published : Apr 12, 2022, 8:17 AM IST

சசிகலா ஆன்மீக சுற்றுப்பயணம்
சசிகலா ஆன்மீக சுற்றுப்பயணம்

சேலம்:தமிழ்நாடு முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா நேற்று (ஏப்ரல் 11) சங்ககிரி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் வழிபட்டார். எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் வழிபட்ட சசிகலா, அங்கு திரண்டு இருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், "எம்ஜிஆர் இந்த இயக்கத்தை ஆரம்பித்து வளர்த்தார்.

அவரை தொடர்ந்து ஜெயலலிதா வளர்த்து கட்டிக் காத்து வந்தார்‌. ஆரம்ப காலத்திலிருந்து கொங்கு மண்டல மக்கள் அதிமுகவிற்கு பெரிய ஆதரவு கொடுத்து வந்தனர். நான் என்றைக்கும் கொங்கு மண்டலத்தை மறக்க மாட்டேன். நம் புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்டு புரட்சித்தலைவியால் வளர்க்கப்பட்ட இயக்கம் எத்தனையோ இடர்பாடுகள் தாண்டி வளர்ந்து வந்திருக்கிறது.

சசிகலா ஆன்மீக சுற்றுப்பயணம்

ஆட்சிக்கட்டிலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்காக உழைத்தார்கள். மக்களுக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுத்தார்கள். தொண்டர்கள் பலத்தினால், நான் மிக விரைவில் அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏற்றுவேன். அது வரை நான் ஓய மாட்டேன். தொண்டர்களால் தான் இந்த இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக அவர் சங்ககிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஓபிஎஸ், இபிஎஸ் உடன் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, "பொறுத்திருந்து பாருங்கள் நல்லவழி பிறக்கும்" என்று சசிகலா பதிலளித்தார். மேலும் அவர், "திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.

சங்ககிரியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் தனியரசு தலைமையில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் சேலம் புறநகர் மாவட்ட முன்னாள் ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் அருணாச்சலம், அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோர் சசிகலாவை வரவேற்றனர். பின்னர் சங்ககிரியில் அமைந்துள்ள தீரன் சின்னமலை நினைவுச் சின்னத்தில் உள்ள தீரன் சின்னமலை படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செய்தார்.

இதையும் படிங்க:'உதயநிதியை துணை முதலமைச்சராக்க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்' - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

ABOUT THE AUTHOR

...view details