சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆயுத பூஜையை முன்னிட்டு தேங்காய், பூசணிக்காய் உள்ளிட்ட பொருள்களை உடைக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, சேலம் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொதுமக்கள் பூசணிக்காய், தேங்காய் போன்ற பொருள்களை உடைத்து பொது சுகாதாரத்திற்கும், பொது மக்களுக்கும் ஊறுவிளைவிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை மாநகராட்சி திடக்கழிவு சேகரிப்பு வாகனங்கள் மூலம், தினசரி குப்பைகளை சேகரிக்க வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடமோ அல்லது மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும்.
மாறாக தெருக்கள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் வாகனங்கள் செல்லும் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திடும் வகையில், குப்பைகளை கொட்டுவோர் மீது பொதுசுகாதார விதிகளின்படியும், திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழும் அபராதம் விதிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.