சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்காவிலுள்ள சக்கரைசெட்டிப்பட்டி, தும்பிபாடி ஆகிய ஊராட்சிக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சேர்வராயன் மலை உள்ளது. இந்த ஊராட்சிகளிலுள்ள கிராம சாலைகள் பலத்த மழை காரணமாக பழுதடைந்து காட்சியளிக்கின்றன.
இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் புதியதாக தார்ச்சாலை அமைத்துதரும்படி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணையின்படி சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓமலூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல், பூமிபூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார். இதில் ஓமலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் கோவிந்தராஜ், அசோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பூமி பூஜையில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் இனிப்புகளை வழங்கினார். பின்னர், சாலைகளைத் தரமாகவும், விரைவாகவும் அமைக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களிடமும் அரசு அலுவலர்களிடமும் அவர் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: இரு நாள்களில் 30 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல்!