தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சேலத்தில் விடிய விடிய மழை! மழைநீரில் சிக்கி தவிக்கும் வீடுகள்!

சேலம்: விடிய விடிய மழை பெய்ததால் சேலத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது.

By

Published : Sep 24, 2019, 3:47 PM IST

Salem

சேலம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கட்கிழமை இரவு 9 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. பலத்த இடி, காற்றுடன் விடிய விடிய மழை பெய்தது. இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் உள்ள 40ஆவது டிவிஷன் பச்சப்பட்டி , ஆறுமுகம் நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

மழைநீரில் சிரமப்படும் மக்கள்

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை அறிந்த சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ், பச்சப்பட்டி பகுதிக்கு மாநகராட்சி அலுவலர்கள், தொழிலாளர்கள் ஆகியோரை அனுப்பி மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்டார்.

இதையடுத்து அதிகாலை ஐந்து மணி முதல் மாநகராட்சி அலுவலர்கள் பச்சப்பட்டி, ஆறுமுக நகர், அசோக் நகர் பகுதிக்கு வந்து மழை நீர் வடிய உரிய நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து பச்சப்பட்டி பொதுமக்கள் சிலர் கூறுகையில், சிறிய மழை பெய்தாலும் மழை நீர் வீடுகளில் புகுந்துவிடுகிறது. இதை தடுக்க சாக்கடை அடைப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மழைநீரில் சிக்கி தவிக்கும் வீடுகள்

மேலும் சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு பின்வருமாறு, ”மேட்டூர் 89.7 மில்லி மீட்டர், சேலம் 87.7 மில்லி மீட்டர், வாழப்பாடி 85 மில்லி மீட்டர், ஓமலூர் 23.4 மில்லி மீட்டர், கொல்லிமலை 58 மில்லி மீட்டர், எடப்பாடி 49. 4 மில்லி மீட்டர், ஆத்தூர் 45.7 மில்லி மீட்டர், தம்மம்பட்டி 30.6 மில்லி மீட்டர், காடையாம்பட்டி 29.6 மில்லி மீட்டர், ஏற்காடு 29 மில்லி மீட்டர், வீரகனூர் 19.2 மில்லி மீட்டர், சங்ககிரி 17.1 மில்லி மீட்டர்.

ABOUT THE AUTHOR

...view details