தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 20, 2020, 2:18 PM IST

ETV Bharat / city

தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கி அரியர் எழுத அனுமதிக்க உத்தரவு

மதுரை: அனைத்து டிப்ளமோ மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை கால அவகாசம் வழங்க வேண்டும். தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

hc
hc

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த தேவதுரை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "புதுக்கோட்டை தெரசா பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டடக் கலைப்பிரிவில் டிப்ளமோ படித்துவருகிறேன்.

நான் பருவ தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்ததால், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்தேன். கரோனா ஊரடங்கால் அதன் முடிவு தாமதமாகியது. இந்த நிலையில் அரியர் தேர்வு எழுதுவதற்கான, தேர்வு கட்டணம் செலுத்த பணம் கட்டுவதற்கு கால அவகாசம் முடிந்து விட்டது.

எனவே, எனக்கு அரியர் தேர்வு எழுத அனுமதி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், "மாணவர், பருவ தேர்வில் தோல்வியடைந்த பாடங்களில் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ளார். மறு மதிப்பீடு முடிவு வருவதற்கு முன்பாகவே அரியர் தேர்வு எழுதுவதற்கான தேர்வு கட்டணம் செலுத்தும் கால அவகாசம் முடிந்துவிட்டது.

ஆனால், மறு மதிப்பீடு முடிவில், தேர்வில் தோல்வி அடைந்தது உறுதி செய்யப்பட்டவுடன், தேர்வு கட்டணம் செலுத்த நிர்வாகத்தை நாடியுள்ளார்.

அதற்குள், தேர்வு கட்டணம் செலுத்த கால அவகாசம் முடிந்து விட்டதால் அனுமதிக்க வில்லை. மறு மதிப்பீடு முடிவுக்காக காத்திருந்ததால், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அரியர் பாடத்திற்கான தேர்வு கட்டணம் செலுத்தவில்லை.

எனவே மாணவரின் நலன் கருதி அரியர் பாடங்களுக்கான, தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு கடைசி வாய்ப்பு வழங்க வேண்டும். மனுதாரருக்கு மட்டும் அல்ல. அனைத்து மாணவர்களின் நலன் கருதி, இதேபோன்ற நிலையில் உள்ள மாணவர்களின், அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை கால அவகாசம் வழங்க வேண்டும். அம்மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

இவ்வாறு, அரியர் மாணவர்களுக்கு, தேர்வு கட்டணம் செலுத்தவும், தேர்வு எழுதவும் ஒரு வாய்ப்பு வழங்கினால், இதற்கு முன் கரோனாவால் தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிப்பை காட்டிலும் சிறப்பாக இருக்கும் என்றும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details