மத்திய அரசின் தொழிலாளர் விரோத திட்டங்களை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், தமிழகம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் 30 சதவிகித பேருந்துகளே இயக்கப்பட்டதால், பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மதுரை மாவட்டம் நாகமலைப்புதுக்கோட்டையில் பேருந்து சேவை மிக்குறைவாக இருந்ததால், பள்ளி மாணவ-மாணவிகள், மதுரை-தேனி நெடுஞ்சாலையில் சாரை சாரையாக நடந்து சென்றனர்.
இதுகுறித்து மாணவர்களிடம் கேட்டபோது, "பள்ளிவிட்டு செல்கின்ற நேரத்தில் பேருந்துகள் இல்லையென்பதால், வடபழஞ்சி, தென்பழஞ்சி, கரடிப்பட்டி, ராஜம்பாடி, கீழக்குயில்குடி, துவரிமான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அனைவரும் நடந்துதான் செல்கிறோம். போராட்டம் நடைபெறுகின்ற நாட்களில் எங்களுக்கு இதுதான் நிலை" என்று வேதனை தெரிவித்தனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளிக் குழந்தைகள் இவ்வாறு நடந்து சென்றால், அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், பள்ளிக்குழந்தைகளின் நலன் கருதியாவது குறிப்பிட்ட தடங்களில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கோ அல்லது சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கோ தமிழ்நாடு போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டம் முன்வர வேண்டும் என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் பாலியல் விழிப்புணர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ்