மதுரை: பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் 20 நாள்கள் நடைபெறும் 'திருவிழாக்களின் திருவிழா' - சித்திரைப் பெருவிழாவில் ஏப்ரல் 5 முதல் 16 ஆம் தேதி வரை மீனாட்சி அம்மன் கோயில் விழாக்களும், ஏப்ரல் 12 முதல் 21 ஆம் தேதி வரை கள்ளழகர் கோவில் விழாக்களும் நடைபெறும்.
இதில், மீனாட்சி அம்மன் கோயில் விழாக்கள் ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தினமும் காலை, மாலை வேளைகளில் கற்பக விருட்சம், சிம்மம், தங்க சப்பரம், பூதம், அன்னம், கைலாச பர்வதம், காமதேனு, தங்கப்பல்லக்கு, தங்க குதிரை, தங்க ரிஷபம், நந்திகேசுவரர், யாளி, வெள்ளி சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதியுலா வந்தனர்.
மதுரையை சித்திரை முதல் ஆவணி மாதம் வரை 4 மாதங்கள் மீனாட்சியும், ஆவணி முதல் சித்திரை மாதம் வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரரும் ஆட்சி செய்வதாக மதுரை மக்களிடம் நம்பிக்கை உண்டு. அதனடிப்படையில், மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டும் பட்டாபிஷேக விழா ஏப்.12 ஆம் தேதி இரவு கோலாகலமாக நடைபெற்றது.
திருக்கல்யாணத்திற்கு முன்னதாக மீனாட்சியும் - சுந்தரேசுவரரும் வெள்ளி சிம்மாசனத்தில் நான்கு சித்திரை விதிகளில் வலம் வந்து, முத்துராமைய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி பின் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுவர். இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுவர்.
அதனைத் தொடர்ந்து, காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். 2 டன் வண்ண மலர்களால் திருக்கல்யாண மேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருக்கல்யாண நிகழ்வை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள்:இலவச தரிசனத்திற்கு தெற்கு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். முக்கிய பிரமுகர்கள், கட்டளைதாரர்கள், உபயதாரர்களுக்கு மேற்கு கோபுர வாசல் வழியாகவும் ரூ.500, ரூ.200 கட்டண சீட்டு பெற்றுள்ள பக்தர்கள் வடக்கு கோபுர வாயில் வழியாகவும் அனுமதிக்கின்றனர்.