தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். அவர் மனைவி, மகன்கள், மகள் என வாழ்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் மனைவி உயிரிழந்தார். அதிலிருந்து பொதுசேவையில் ஆர்வம்கொண்ட இவர், பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்தப் பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அளித்து வருகிறார்.
அதேபோல மார்ச் மாதம் மதுரைக்கு வந்து யாசகம் பெற்று கிடைத்த ரூ. 10 ஆயிரம் பணத்தை, மே மாதம் கரோனா நிவாரண நிதியாக மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினார். அதைத்தொடர்ந்து 8 முறை ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தமாக இதுவரை ரூ.80 ஆயிரம் வழங்கி உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் காமராஜர் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி நாளில் பள்ளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரது சேவையைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.