தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குழந்தையின் கட்டைவிரல் வெட்டப்பட்ட விவகாரம் - நிவாரணம் வழங்க உத்தரவு

அரசு மருத்துவமனையில் குழந்தையின் கட்டைவிரல் வெட்டப்பட்ட வழக்கில் இடைக்கால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கி அதுதொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By

Published : Jul 26, 2021, 8:32 PM IST

madras-high-court-madurai-bench
madras-high-court-madurai-bench

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில், எனது மனைவி பிரியதர்ஷினிக்கு மே 25ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தாள்.

அப்போது குழந்தைக்கு உடல்நலம் சீராக இல்லை என்று மருத்துவர்கள் கூறியதால், குழந்தையின் கையில் ஊசி பொருத்தி, அதன் மூலம் குளுக்கோஸ் செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து, குழந்தை கையிலிருந்த பேண்டேஜை செவிலி ஒருவர் கைகளால் அகற்றாமல், கத்தரிக்கோலை வைத்து வெட்டினார். இதன் காரணமாக எனது குழந்தையின் இடதுகை கட்டை விரல் துண்டானது. இதுகுறித்து கேள்வி எழுப்பினேன்.

அதனால் மருத்துவர்கள் கை விரலை அறுவை சிகிச்சை மூலம் சேர்க்க முயற்சித்து தோல்வியடைந்தனர். எனவே, மருத்துவமனை நிர்வாகம் இதற்கு உரிய இழப்பீடு வழங்கவும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் கட்டை விரல் பொருத்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இடைக்கால நிவாரணம்

இந்த மனுவானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஜூலை 24ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி குழந்தையின் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக 75,000 ரூபாய் 4 வார காலத்திற்குள் வழங்க வேண்டும்.

குழந்தையின் கட்டைவிரலை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பொருத்த நவீன மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குழந்தையின் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதா, குழந்தைக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பில், நிவாரணத் தொகை இந்த வாரம் வழங்கப்படும்.

குழந்தை, மாற்றுச் சிகிச்சைக்காகச் சென்னை பல்நோக்கு மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டு, தற்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ ஆலோசனைப்படி விரைவில் சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: குழந்தையின் கட்டைவிரல் வெட்டப்பட்ட விவகாரம்: பெற்றோருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details