இது குறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக அரசின் வருண ஜெபம் என்பது போர்க்களத்தில் இருக்கும் வீரர் துப்பாக்கி இல்லாதது போல் இருக்கிறது. போர்க்களத்திற்கு செல்பவர்கள் துப்பாக்கியுடன் செல்ல வேண்டும். துப்பாக்கி இல்லாமல் போனால் ஒரு போர் வீரரின் நிலை எவ்வளவு பரிதாபமோ அப்படித்தான் தமிழ்நாடு அரசின் நிலை இருக்கிறது.
குடிப்பதற்கு தண்ணீர் கேட்டால் நாங்கள் மழைக்காக வேண்டுகிறோம். மழை வந்த பின் தண்ணீர் தருகிறோம் என்று சொல்வதற்கு ஒரு அரசு தேவையில்லை.
ஒரு அரசு இன்றியமையாத கடமையை செய்வதற்கு தவறி இருக்கிறது. அதற்காக இந்த அரசு வெட்கப்பட வேண்டும். குடிநீர் பிரச்னையை அரசியலாக்கக் கூடாது என அமைச்சர்கள் சொல்கிறார்கள். அதனை எப்படி அரசியலாக்காமல் இருப்போம். கேரளாவில் முதலமைச்சர் தண்ணீர் கொடுக்கத் தயார். ஆனால் தண்ணீரை கேட்டுப் பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தயாராக இல்லை.
ஏனென்றால் அவர் வீட்டிற்கு ஒரு நாளைக்கு 4 லாரி தண்ணீர் செல்கிறது; அதனால் அவர் கவலைப்பட மாட்டார். ஆனால் மக்களின் சிரமத்தை அவர்களும் சேர்ந்து அனுபவிக்க வேண்டும். கருணாநிதியும், எம்ஜிஆரும் முதலமைச்சராக இருந்தபோது அண்டை மாநிலங்களுக்குச் சென்று குடிப்பதற்காக தண்ணீர் கேட்டு வந்த வரலாறுகள் உண்டு.
ஆனால் இப்போது உள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் முதலமைச்சர் கேட்டால் தண்ணீர் தருவார்கள். ஆனால் இப்பொழுதுதான் தமிழ்நாடு முதலமைச்சர் கேரளா முதலமைச்சருக்கு கடிதம் எழுதலாம் என்று யோசித்துள்ளார். இவர் யோசித்து முடிப்பதற்குள் எவ்வளவோ தண்ணீர் பிரச்னை வந்துவிடும்” என்றார்.