தமிழ்நாடு

tamil nadu

காவல் நிலைய விசாரணைக்குப் பின் இளைஞரின் சந்தேக மரணம் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

By

Published : Dec 2, 2020, 11:58 AM IST

மதுரை: காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின் சந்தேகமான முறையில் இளைஞர் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

காவல்நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்
காவல்நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்

மதுரை பேரையூரைச் சேர்ந்த சந்தோஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "எனது மூத்த சகோதரர் இதயக்கனி, புனிதா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பாக புனிதாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், சாப்டூர் சார்பு ஆய்வாளர் ஜெயக்கண்ணன், காவலர் புதிய ராஜா ஆகியோர் தொடர்ச்சியாக எங்கள் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை என்னும் பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவந்தனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 16இல் எனது இளைய சகோதரர் ரமேஷை சார்பு ஆய்வாளர் ஜெயக்கண்ணன், காவலர் புதிய ராஜா ஆகியோர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இரவு வீடு திரும்பிவிடுவார் என எதிர்பார்த்த நிலையில், அதிகாலை எங்கள் வீட்டிலிருந்து 300 அடி தொலைவில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

காவல் துறையினர் சட்டவிரோதமாக அழைத்துச் சென்று தாக்கியதன் காரணமாக எனது சகோதரர் உயிரிழந்துள்ளார். எனவே இந்த வழக்கில் உரிய நீதி கிடைக்க வேண்டும், வழக்கு விசாரணையை வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை சிபிசிஐடி தனிப்பிரிவு விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க...தடையை மீறி போராட்டம்: அன்புமணி, ஜிகே மணி உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

ABOUT THE AUTHOR

...view details