மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமனத்திற்காக அரசாணை வெளியிடப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம், மருத்துவம், சட்டம் போன்று ஒரு குறிப்பிட்ட படிப்பிற்கான பல்கலைக்கழகமாக இயங்குகிறது.
ஆனால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் பல்வேறு துறைகளை கொண்டுள்ளது. ஆசிரியர்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமனம் செய்யப்பட உள்ளவர் கல்வியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போதைய அரசு ஆணையில் கல்வித் தகுதியில் எந்தத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும் உரிய கல்வித் தகுதி இருந்தால், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது ஒரு தவறான வழிகாட்டுதலாக அமையும்.
இதற்கு முன் இந்த பல்கலைக்கழகத்திற்கு நியமிக்கப்பட்ட மூன்று துணைவேந்தர்களும் கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்கள். தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டம் (திருத்தம்) 14.7.2017 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு சட்டத்தின்படி, துணை வேந்தர் பதவிக்கு ஏதாவது ஒரு துறையில் முனைவர் பட்டம் பெற்றிருந்தால் போதும் என்று உள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமனத்திற்கு 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி தேடுதல் குழு அமைக்கப்பட்டது. அதனடிப்படையில் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
எனவே உயர்கல்வித்துறை சார்பில் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 187இன் படி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்திற்கு ஏதாவது ஒரு துறையில் முனைவர் பட்டம் பெற்றிருந்தால் போதும் என்று உள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்றவரை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு மூன்று வாரங்களுக்குள் துணைவேந்தர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.