நீட் தேர்வு ஆள்மாறாட்டம் எதிரொலியாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்ற 250 மாணவர்களில் 210 மாணவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில் மீதியுள்ள 40 மாணவர்களுக்கு இரண்டாவது கட்டமாக சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் கல்லூரி முதல்வர் வனிதா தலைமையில் நடைபெற்றது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கல்லூரி முதல்வர் வனிதா, "மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வு மூலமாக மருத்துவப் படிப்பில் சேர்ந்த 250 மாணவ மாணவியரின் சான்றிதழ்களும் ஆவணங்களும் சரியாக உள்ளது. இங்கு எந்த முறைகேடும் நடைபெறவில்லை.
கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி போலியான சேர்க்கை கடிதத்துடன் இரண்டு வடமாநில மாணவர்கள் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு போலியான அனுமதி கடிதம் கொண்டுவந்து சேர முயன்றது தொடர்பாக தல்லாகுளம் காவல் துறையிடம் மாணவர்களை ஒப்படைத்ததோடு புகாரும் அளித்துள்ளோம்" என்றார்.
டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலம் நீட் தேர்வில் தேல்வி அடைந்த இரண்டு பேர் 6 முதல் 8 லட்சம் வரை பணம் கொடுத்து, இந்தப் போலியான கடிதத்தை வாங்கிவந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்களுக்கு 2ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணி இது தொடர்பாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநருக்கு புகார் அளித்துள்ளதாகக் கூறியுள்ள வனிதா, இந்தப் போலியான சேர்க்கைக் கடிதம் தொடர்பாக தங்களது ஊழியர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.