இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “தூத்துக்குடி மாவட்டம் சின்னம்ம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மனோகரன், புதூர் பேரூராட்சியில் தற்காலிக கொசு ஒழிப்புப் பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். வெளியூர் செல்வதற்காக அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே மனோகரன் சென்ற போது, திடீரென வலிப்பு வந்து மயங்கி விழுந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். முன்களப் பணியாளரான மனோகரனுக்கு தடுப்பூசி போட்டதன் காரணமாகவே இறந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி, உடலை வாங்க மறுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கடந்த ஜனவரி 21 ஆம் தேதி மனோகரன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஜனவரி 30 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். ஆகவே, கரோனாவிற்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் துப்புரவு பணியாளரின் உடலை, ஜிப்மர் அல்லது எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் குழு அமைத்து மறு உடற்கூராய்வு செய்து, அவரது இறப்பிற்கான காரணத்தை கண்டறிய உத்தரவிடவேண்டும். மேலும் உரிய இழப்பீடு வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.