மதுரை: முதியோர் சலுகை உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளும் மீண்டும் வழங்கப்படும் எனவும், சிறப்பு வண்டிகள் அனைத்தும் ரெகுலர் வண்டிகளாக இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்திருப்பது எனது கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என சு. வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ரயில்வே வாரியத்தின் நவம்பர் 12ஆம் தேதி கடிதத்தில் அனைத்து சிறப்பு ரயில்களையும் கால அட்டவணைப்படி அதிலுள்ள வண்டி எண்களுடன் ரெகுலர் வண்டிகளாக இயக்கிட ஆணையிட்டுள்ளது.
அதனடிப்படையில் தெற்கு ரயில்வே 295 சிறப்பு ரயில்களின் வண்டி எண்களை கால அட்டவணைப்படியான எண்களுடன் மாற்றி அமைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வண்டிகளில் பறிக்கப்பட்ட முதியோர் சலுகை உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளும் மீண்டும் வழங்கப்படும்.
வழக்கமான கட்டணங்கள் வசூலிக்கப்படும். இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள் முன்பதிவுடன் இயங்கும். எந்த வண்டிகளில் பொதுப் பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனவோ அந்த வண்டிகளில் பொதுப் பெட்டிகள் உடன் வண்டிகள் இயங்கும்.
சலுகைகளும் மீண்டும் வழங்க நடவடிக்கை
புதிய எண்களுடன் இயங்கும் வண்டிகளில் முன்பே முன்பதிவு செய்தவர்களுக்கு கூடுதல் கட்டணமும் அதிக கட்டணத்துக்கு மீதி திருப்பி தருவதோ கிடையாது. எந்தத் தேதியிலிருந்து இந்த வண்டிகள் ரெகுலர் வண்டிகளாக இயக்கப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். சர்வரில் உரிய மாற்றங்கள் செய்தபின் நடைமுறைக்கு வரும். நடைமுறைக்கு வரும் தேதியிலிருந்து சலுகைகளும் திரும்ப கிடைக்கும்.
அக்டோபர் 22ஆம் தேதி ரயில்வே அமைச்சரைச் சந்தித்து முதியோர் சலுகை உள்பட ஐம்பத்து மூன்று வகை சலுகைகளையும் மீண்டும் வழங்கிட வலியுறுத்தினேன். அவர் ரயில் வண்டிகளை சிறப்பு வண்டிகளாக இயக்குவதை மாற்றி ரெகுலர் வண்டிகளாக இயக்கப்படும்போது சலுகைகள் மீண்டும் வழங்கப்பட நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.
அமைச்சருக்கு எம்பி நன்றி
சிறப்பு வண்டியிலேயே சலுகைகள் வழங்க நான் வலியுறுத்தினேன். அல்லது ரெகுலர் வண்டிகளாகச் சிறப்பு வண்டிகளை இயக்க விரைந்து முடிவெடுக்க நான் வலியுறுத்தினேன். அந்த அடிப்படையில் இப்போது அனைத்துச் சிறப்பு வண்டிகளையும் ரெகுலர் வண்டிகளாக கால அட்டவணையிலுள்ள எண்களுடன் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்த சு. வெங்கடேசன் வழக்கமான கட்டணங்களுடன் சலுகைகளுடன் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ரயில்வே அமைச்சருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதனை விரைந்து நடைமுறைக்குக் கொண்டுவர கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை - தமிழ்நாடு அரசு ஆணை