தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அத்திக்கடவு அவினாசி: எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனுக்கு உழவர்கள் பாராட்டு

நம்பியூர் தனியார் மண்டபத்தில் 60 ஆண்டு கால கனவான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றி நிதி ஒதுக்கிய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு அத்திக்கடவு அவிநாசி திட்டக்குழு, விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.

minister sengottaiyan attending farmers association meeting in erode
minister sengottaiyan attending farmers association meeting in erode

By

Published : Apr 3, 2021, 6:41 AM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள நம்பியூர் தனியார் மண்டபத்தில் உழவர்களின் 60 ஆண்டு கால கனவான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றி நிதி ஒதுக்கிய முதலமைச்சருக்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசுகையில், இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது உழவர்களுக்கு அரசு அளித்துவரும் ஒத்துழைப்புத் தெரிகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “முதலில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ரூ.3.82 கோடி ஆய்வுப் பணிக்காக நிதி ஒதுக்கினார். அதன்பின் அவர் மறைந்தாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டார்.

உழவர்கள் நலன் காக்கும் அரசாக இருந்து மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறது. நம்பியூர் பகுதியும் 100 ஆண்டுகளுக்குப் பிறகு பாலைவனமாக மாறிவிடும் என்ற அறிக்கையைக் கேட்டு கண்ணீர் வடித்தேன்.

அதன்பின்னர்தான் அத்திக்கடவு - அவினாசி திட்டம் கொண்டுவரப்பட்டது. வழக்கமாகத் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அதில் சிலவற்றைச் செயல்படுத்த முடியும்; சிலவற்றைச் செயல்படுத்த முடியாது.

ஆனால் தேர்தலுக்கு முன்பே ரூ.12,110 கோடி வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அத்திக்கடவு அவினாசி திட்டம் 75 விழுக்காடு முடிந்துவிட்டது.

அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை செய்தபோது தேர்தலுக்கு முன்பே பணிகளை முடித்து தண்ணீர் வழங்க முடியுமா என்றுதான் கேட்டார். கரோனா காலம் என்பதால் பணியாள்கள் சொந்த மாநிலத்திற்குச் சென்றுவிட்டதால்தான் தாமதமானது. இதற்காக அரசு முழுமையாக நிதி ஒதுக்கியுள்ளது.

சூரிய மின்சக்தி மூலமாக ராட்சச மோட்டார்களை இயக்க 64 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 8 மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு மோட்டார் பழுதடைந்தாலும் ஒரு விநாடிகூட தாமதமாகாமல் அடுத்த மோட்டார் தானாகச் செயல்படும் வகையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நான் அதிகமாகப் பேச முடியாது. பேச பேச செலவு கணக்கு அதிகரித்துவிடும். நீங்கள் நேசிக்கும் இந்தத் திட்டம் போராடிபெற்ற திட்டம். இந்தப் பணிகளை முழுமையாக முடித்து உங்களிடம் ஒப்படைக்கப்படும்.

அதேபோன்று தத்தனூர் புலிப்பார் ஊராட்சியில் சிப்காட் அமைக்கக் கூடாது என்று உழவர்கள் கோரிக்கைவைத்தனர். அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது. அதனால் அந்தப் பகுதி உழவர்கள் இனி அச்சமடைய தேவையில்லை.

அமைச்சர் செங்கோட்டையன் உரை

அத்திக்கடவு திட்டம் காரணமாக நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஏழு வார காலத்தில் திட்டம் முடிக்கப்பட்டு ஏரி, குளங்கள் அனைத்தும் நிரப்பப்படும். சில குளம் ஏரிகள் விடுபட்டுள்ளதாகக் கூறினார்கள். இதற்காக 415 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அத்திக்கடவு அவினாசி திட்டம்-2ஐ முதலமைச்சர் அறிவித்துள்ளார்” என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details