ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதியில் அதிகளவு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதேபோல் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களும் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டுவருவதாகவும் அலுவலர்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
அப்புகார்களின் அடிப்படையில் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் சிவசங்கர், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் குழந்தைவேலு, நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறையினர், நகராட்சி, சுகாதாரத் துறையினர், உணவு பாதுகாப்புத் துறையினர் ஆகியோருடன் காவல் துறையினரும் இணைந்து தெப்பக்குளம் பகுதியில் வடமாநில வணிகர்களின் கிடங்குளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதில் வீடுகளைக் கிங்குகளாக வாடகைக்குப் பிடித்து அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களும், நெகிழியால் செய்யப்பட்ட டம்ளர், தட்டு, பை உள்ளிட்ட பொருள்களும் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டன.