தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 4, 2022, 12:15 PM IST

ETV Bharat / city

யூ-ட்யூப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது

சத்தியமங்கலத்தில் நகைக்கடையின் சுவரைத் துளையிட்டு கொள்ளையடிக்க முயன்ற ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடனை அடைப்பதற்காக யூ-ட்யூபில் கொள்ளை அடிப்பது எப்படி என்பதைப் பார்த்து திருட முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொள்ளை முயற்சி
கொள்ளை முயற்சி

ஈரோடு:சத்தியமங்கலம் கடைவீதி பகுதியைச் சேர்ந்தவர் பத்ரிநாத். இவர் அப்பகுதியில் கன்னிகா ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்திவருகிறார். கடந்த இரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு பத்ரிநாத் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அன்று நள்ளிரவு இவரது கடையின் பக்கவாட்டுச் சுவரில் ஒரு கொள்ளையன் துளையிட்டு நகைகளைக் கொள்ளையடிக்க முயற்சிப்பதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

யூ-ட்யூப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட ஈரோடு காவல் துறையினர், மோப்ப நாயை வரவழைத்து, தடயவியல் வல்லுநர்கள் தடயங்களைச் சேகரித்தனர்.

ஈரோடு காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் உத்தரவின்பேரில், பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி பதிவுகளை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ராஜபாண்டியன்

விசாரணையில், நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற நபர் கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள கட்டளை கிராமத்தைச் சேர்ந்த ராஜபாண்டியன் (27) என்பது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினர் ராஜபாண்டியனின் செல்போன் சிக்னலை வைத்து தேடுதல் வேட்டை மேற்கொண்டதில் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை அருகே ராஜபாண்டியன் இருப்பது தெரியவந்ததையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று அவரைக் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட ராஜபாண்டியனிடம் விசாரணை மேற்கொண்டதில், கடன் பிரச்சினை காரணமாக யூ-ட்யூப் பார்த்து கொள்ளையடிக்க முயற்சி செய்ததாகத் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் காவல் துறையினர் ராஜபாண்டியனை கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:சென்னையில் துணிகரம்.. டிஜிட்டல் லாக்கரை திறந்து 43 பவுன் கொள்ளை, 4 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details