தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நிலமற்ற மக்கள் மனதில் நிலையாகக் குடி கொண்ட மனிதர் - யார் இந்த உமாநாத்?

முதலமைச்சரின் தனிச்செயலாளர் பதவி வகிக்கும் உமாநாத் ஐஏஎஸ் பெயரில் ஒரு கிராமப்பகுதி உள்ளதை அறிவீர்களா. ஆம், உதவி செய்த மாவட்ட ஆட்சியரின் பெயரை ஊருக்கு வைத்து நன்றிக் கடன் செலுத்தி வரும் கிராம மக்கள் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பினை காணலாம்.

stalin personal secretary umanath, tamilnadu cm personal secretary umanath, umanath colony, உமாநாத் காலனி, முதலமைச்சர் தனிச் செயலாளர் உமாநாத் ஐஏஎஸ், tamilnadu chief minister personal secretaries, முதலமைச்சரின் தனிச் செயலாளர்கள், முக்கிய செய்திகள்
கலெக்டர் திரு. உமாநாத் காலனி

By

Published : May 8, 2021, 6:08 PM IST

Updated : May 9, 2021, 9:33 AM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளுக்கு அரசியல் தலைவர்கள், ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்த அலுவலர்கள் பெயர்கள் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் மாவட்டத்தில் ஒரு அரசு உயர் அலுவலரின் பெயர் கொண்ட காலனி உள்ளது என்பது சிலருக்குப் பிரமிப்பை ஏற்படுத்தலாம்.

சாதாரண மக்கள் கோரிக்கை மனுக்களோடு அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து அலைந்து திரிந்தாலும், அலுவலர்கள் மக்களின் கோரிக்கைகளுக்குச் செவி கொடுப்பது என்பதே அரிது. அதிலும் அந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது அதனினும் அரிது. அப்படி உதவி செய்த அலுவலர்களை காலப்போக்கில் மக்களும் மறந்து விடுவது வழக்கம்.

நன்றி மறவா கிராமம்

இங்கு அந்த நிலையை மாற்றி அமைத்துள்ளனர் விராலிக்காடு கிராமத்தினர். தங்களுக்கு உதவி செய்த ஆட்சியரை காலந்தோறும் நினைவு கூறும் வகையில், ஆட்சியரின் பெயரைத் தங்களது பகுதிக்குச் சூட்டி, கிராம மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். கருமத்தம்பட்டி அருகே உள்ளது விராலிக்காடு பகுதி.

‘கலைக்டர் திரு. உமாநாத் காலனி’

இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2011ஆம் ஆண்டிற்கு முன்பு வரை இப்பகுதி மக்கள் தாங்கள் வசித்திருந்த இடத்திற்குப் பட்டா இல்லாமல் வாழ்ந்துவந்தனர். கடந்த 30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்கள் பட்டா கேட்டு அரசு அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோரிக்கை மனு, போராட்டம் என, பல கட்ட முயற்சிகளில் ஈடுபட்ட நிலையிலும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

இவ்வேளையில் தான் கடந்த 2011ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியராக இருந்த உமாநாத்திடம், விராலிக்காடு பகுதி மக்கள் பட்டா வழங்கக்கோரி கோரிக்கை மனுவை அளித்தனர். இதனை பரிசீலித்த ஆட்சியர் உமாநாத், 2 ஏக்கரில் குடியிருந்து வரும் 100 குடும்பங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டார்.

பட்டாவுடன் கிராமவாசி

இதனால் அப்பகுதி மக்களின் 30 ஆண்டு கால கனவு நனவானது. அரசு அலுவலராகத் தனது பணியை ஆட்சியர் உமாநாத் செய்திருந்தாலும், உதவி செய்த ஆட்சியரை காலந்தோறும் நினைவு கூறும் வகையில், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு ‘கலைக்டர் திரு. உமாநாத் காலனி’ என பெயர்சூட்டி அப்பகுதி மக்கள் தங்களின் நன்றியைத் தெரிவித்துள்ளனர். அனைத்து அரசு ஆவணங்களிலும் உமாநாத் காலனி என்றே மாற்றியுள்ளனர்.

பூரிக்கும் கிராம் மக்கள்

கடந்த 2011ஆம் ஆண்டிற்குப் பிறகு பணி மாறுதல் காரணமாக உமாநாத் பல்வேறு பொறுப்புகளுக்குச் சென்ற நிலையிலும், கடந்த பத்து ஆண்டுகளாக அப்பகுதி ‘கலைக்டர் திரு. உமாநாத் காலனி’ என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களில் ஒருவராக உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது அவர் பெயரை சுமந்திருக்கும் மக்கள் மனங்களில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்துப் பேசிய அப்பகுதி மக்கள், 30 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் சிரமப்பட்டு வந்தோம். எங்களது கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கிய ஆட்சியருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இப்பகுதிக்கு ‘கலைக்டர் திரு. உமாநாத் காலனி’ என பெயர் வைத்தோம்.

யார் இந்த உமாநாத்

தற்போது முதலமைச்சரின் தனிச் செயலாளர்களில் ஒருவராக உமாநாத் நியமிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களுக்கு உதவி செய்தது போல தமிழ்நாட்டு மக்களுக்கும் அவர் உதவி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தனர். முதலமைச்சர் ஸ்டாலினின் அலுவலர்கள் நியமனம் பரவலாகப் பாராட்டை பெற்று வரும் வேளையில், தங்களது ஊருக்கு உதவி செய்த உமாநாத் முக்கியப் பொறுப்பிற்கு வந்திருப்பது அப்பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : May 9, 2021, 9:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details