கோயம்புத்தூர்:துடியலூர் அடுத்த வரப்பாளையம், பன்னிமடை பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் ஏராளமான யானைகள் இந்தப் பகுதி வழியாக வலசை செல்வது வழக்கம்.
அவ்வாறு வரும் யானைகள் நீர், உணவுத் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்றிரவு (பிப்ரவரி 11) வரப்பாளையம் கிராமத்திற்குள் மூன்று யானைகள் கொண்ட கூட்டம் புகுந்துள்ளது.
இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள மனோகரன் என்பவரது வாழைத் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. இதனையடுத்து வனத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த வனத் துறையினர் யானைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்கு விரட்டியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை (பிப்ரவரி 12) மனோகரின் வாழைத் தோட்டத்தில் யானை உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்த வனத் துறையினர் ஆய்வுமேற்கொண்டனர்.