பேரவைத் தேர்தலில் என்னதான் வெற்றிபெற்று ஆட்சிபீடத்தில் அமர்ந்தாலும் திமுகவுக்கு ஒரு 'வலி' இருந்துகொண்டேதான் இருக்கிறது. அது தேர்தலில் கொங்கு மண்டல மக்கள் அளித்த அதிர்ச்சிதான்!
இதற்கெல்லாம் சளைக்காத முதலமைச்சர் ஸ்டாலின், 'எங்களுக்குத் தேர்தலில் தோல்வியைப் பரிசளித்தாலும் அவர்களுக்கு நல்லதையே செய்து அவர்களை வெட்கப்பட வைப்போம்' என்று கூறி சோர்வடைந்திருந்த கொங்கு மண்டல உடன்பிறப்புகளுக்கு உற்சாக டானிக் கொடுத்தார்.
மேலும், கோவையில் கட்சியின் பொறுப்பாளராக செந்தில்பாலாஜியை நியமித்தார். இத்தோடு கட்சியை வளர்க்கும் பணியையும், கூடுதலாக சில 'அசைன்மென்ட்'டுகளையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்குமாறு செந்தில்பாலாஜிக்கு உத்தரவிட்டார். அதன்படி, கோவை மட்டுமல்லாது கொங்கு மண்டலத்தில் 'தனது வேலை'யை செவ்வனே செய்ய தொடங்கிவிட்டார் செந்தில்பாலாஜி.
கடந்த சில நாள்களுக்கு முன்பு கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலமேலு மனோகரன், அதிமுக வடக்கு நகரச் செயலாளர் பாண்டியன் அடுத்தடுத்து அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்திட கடந்த சில நாள்களாக கோவையில் முகாமிட்டு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிரமாகப் பணியாற்றிவந்தார்.